flashvortex

Friday, March 16, 2012

இலங்கையில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க அமெரிக்கா உதவி

இலங்கையில் இடம்பெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க அமெரிக்கா உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனம் இந்தத் திட்டத்திற்கு உதவிகளை வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமைகளை விசாரணை செய்யும் உத்தி முறைமைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பாலியல் வன்கொடுமைகளை விசாரணை செய்யும் தடயவியல் நிபுணர்களின் திறமைகளை மேம்படுத்தி அதன் மூலம் குற்றவாளிகளை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது எவ்வாறு என்பது குறித்து கொழும்பில் அண்மையில் விசேட கருத்தரங்கொன்றும் நடைபெற்றுள்ளது.
தடயவியல், இரசாயன பகுப்பாய்வு மற்றும் மருத்துவ துறையைச் சேர்ந்த நிபுணர்கள் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளனர்.
ஐந்து நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களின் பங்களிப்புடன் இந்த விசேட கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமைகளை விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்படுவதன் மூலம் வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இந்தியா- வங்கதேசம் மோதல்


ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டியில் இன்று இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. இதில் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா களமிறங்கும்.

இந்தியா, பாகிஸ்தான் இலங்கை மற்றும் வங்கதேசம் என நான்கு நாடுகள் பங்கேற்கும் 11வது ஆசிய கிண்ண கிரிக்கட் தொடர், மிர்புரில் நடக்கிறது. இதில் இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை சந்திக்கிறது.
இலங்கைக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, வங்கதேசத்துக்கு எதிரான போட்டியை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இதற்கேற்ப கடந்த போட்டியில் சதம் அடித்த காம்பிர், விராத் கோஹ்லி இன்றும் அபார ஆட்டத்தை தொடர வேண்டும்.
கடந்த 33 இன்னிங்ஸ்களாக சதம் அடிக்கும் முயற்சியில் தோற்று வரும் சச்சினுக்கு, இன்று நல்ல நாளாக அமையட்டும். பலம் குன்றிய வங்கதேசத்துக்கு எதிராக 100வது சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணித்தலைவர் தோனி, ரெய்னா ஆகியோருடன் ரோகித் சர்மாவும் வேகமாக ஓட்டங்கள் சேர்க்க வேண்டும். தொடர்ந்து ஏமாற்றி வரும் ரவிந்திர ஜடேஜாவுக்குப் பதில் இன்று யூசுப் பதான் களம் காணலாம்.
இருப்பினும் அவுஸ்திரேலிய தொடரில் இருந்து ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கிடைக்காமல், இருக்கும் மனோஜ் திவாரிக்கு இன்றும் இடம் கிடைப்பது சிக்கல் தான்.
வேகப்பந்து வீச்சில் இர்பான் பதான், வினய் குமார் அணிக்கு தேவையான நேரங்களில் விக்கெட் வீழ்த்துவது சாதகமானது. இலங்கையுடன் ஏமாற்றிய பிரவீண் குமார், இன்று எழுச்சி பெறலாம். இந்த கூட்டணியில் டின்டா இணைவது சந்தேகமே. சுழலில் அஷ்வின் தனது வேலையை சரியாகச் செய்வதால், ராகுல் சர்மா வேடிக்கை பார்க்க வேண்டியது இருக்கும்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் போட்டியில் வெற்றிக்கு அருகில் வந்து கோட்டை விட்டது வங்கதேசம். இது இந்த வீரர்களின் அனுபவமின்மையை வெளிப்படுத்தியது.
இதனால் இன்று கூடுதல் கவனத்துடன் விளையாட காத்திருக்கின்றனர். தமிம் இக்பால், சாகிப் அல் ஹசன் ஆகியோருடன், இம்ருல் கைய்ஸ், நஜிமுதீன், ஆல் ரவுண்டர் நாசர் ஹொசைன், அணித்தலைவர் முஷிபிகுரும் ஓட்டங்கள் எடுக்க முயற்சிக்கலாம்.
இந்திய துணைக்கண்டத்து ஆடுகளங்களின் தன்மை குறித்து வங்கதேச வீரர் மொர்டசாவுக்கு நன்கு தெரியும். இவரது அனுபவம் கைகொடுத்தால், இந்திய அணியை ஓட்டங்கள் எடுக்கும் வேகத்துக்கு தடை போடலாம். இது தவிர, அப்துல் ரஜாக், சபியுல் இஸ்லாம், மகமதுல்லாவும் பந்துவீச்சில் சாதிக்க முயற்சிக்கலாம்.
இன்றைய போட்டியில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்யலாம். அதேநேரம் சொந்த மண்ணில் சாதித்துக் காட்டியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள வங்கதேச அணியும் வெற்றிக்கு கடுமையாக போராடும்.

சர்வதேச போர்க்குற்ற விசாரணையின் தவிர்க்க முடியாத அவசியத்தை வலியுறுத்தும் சனல்4 ஆதாரங்கள்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கைத் தீவு தொடர்பான அக்கறை கூர்மையடைந்துள்ள காலகட்டத்தில், அமெரிக்காவின் தலைமையில் இலங்கை தொடர்பான பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே.

இப்பிரேரணை கொண்டுவரப்படுவது தொடர்பான செய்திகள் வெளிவந்தபோது, தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் வாழும் தமிழ்மக்கள்;, பிரேரணை தொடர்பாக மிகுந்த நம்பிக்கையும், அக்கறையும் கொண்டவர்களாக காணப்பட்டனர்.

எனினும், அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இப்பிரேரணை, இலங்கை அரசினால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட விடயங்களை அமுல்படுத்தக் கோருவதாகவே அமைந்துள்ளது.

அதுமட்டுமல்லாது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில், போர்க்குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறும் விடயங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், பொறுப்புக் கூறல் தொடர்பாக ஓரு உள்ளகப் பொறிமுறையை உருவாக்கி ஐ.நாவின் ஆலோசனைகளைப் பெறும் வகையில் இலங்கை அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விடயமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இன்னொரு வகையில் கூறுவதாயின், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில், போர்க் குற்றம் மேற்கொண்ட குற்றவாளிகளாக ஐ.நாவின் நிபுணர் குழு அறிக்கையில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கை அரசு, தான் செய்த குற்றங்கள் தொடர்பாக தானாகவே ஓர் விசாரணை நடாத்தி, தானே அதில் நீதிபதியாகவும் இருந்து தீர்ப்புக்கூறும் வேடிக்கையான நிலைக்கு அங்கீகாரமளிப்பதாக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட மேற்படி பிரேரணை அமைந்துள்ளமை துரதிஸ்டவசமானது என்பதனை வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றோம்.
பாரதூரமான போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களிடமே, நீதி விசாரணையை மேற்கொள்ளச் கோரும் இச் செயலானது, நீதியை குழிதோண்டிப் புதைக்கும் செயலுக்கு ஒப்பானது.

இச்செயற்பாடுகள், தமிழ்மக்களுக்கு ஆழமான ஏமாற்றத்தையும், மிகுந்த கவலையும் ஏற்படுத்தியுள்ள சூழலில், பிரித்தானியாவிலிருந்து ஒளிபரப்பாகும் சனல் 4 தொலைக்காட்சி ஊடாக 14-03-2012 அன்று ஒளிபரப்புச் செய்யப்பட்ட இலங்கையின் போர்க்குற்றம் 2: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் தலைப்பில் தமிழ்மக்கள் மீதான படுகொலை சம்பவங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

ஊடக நெறிமுறையை பின்பற்றி தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம் இலங்கை அரசு மேற்கொண்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களில் நான்கை வெளிக்கொண்டுள்ளது.

• இலங்கையில் தமிழர்களுடைய பிரதேசத்தில், “பாதுகாப்பு வலயம்” என இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த பொதுமக்களையும், மருத்துவமனைகளையும் திட்டமிட்டு இலக்கு வைத்து ஆட்டிலறி மற்றும் ஏனைய கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதலை மேற்கொண்டு படுகொலைசெய்தது.
• பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, சட்டத்துக்கு முரணான வகையில் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கிடைக்காமல் அரசு தடைசெய்தது.
• காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிகளை இலக்கு வைத்து, தாக்குதல் நடாத்தி மக்களை படுகொலைசெய்தது.
• சரணடைந்த கைதிகளை சர்வதேச சட்டங்களுக்கு மாறாக காட்டுமிராண்டித் தனமாக சுட்டுக்கொன்றமை.

போன்ற குற்றங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
இதற்கு முன்னர் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட இலங்கையின் கொலைக்களங்கள் - 01 ஆவணப்படத்தில காண்பிக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்காது அவற்றை நிராகரிக்கும் வகையிலேயே இலங்கை அரசின் செயற்பாடுகள் அமைந்திருந்து. அந்த வகையில், பொறுப்புக் கூறும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் மீது எத்தகைய நம்பிக்கையும் வைத்திருக்க முடியாதென்பதை சனல் 4 வெளிப்படுத்தியுள்ளது.
மேலும், சனல் 4 ன் இலங்கை கொலைக்களங்கள் ஆவணப்படம் பாகம் ஒன்றில் காண்பிக்கப்பட்ட விடயங்கள் உண்மையானவை என்று ஐ.நா நிபுணர் குழு ஏற்றுக்கொண்டிருந்தது. அவ்வாறான நிலையிலும் கூட, அதனை இலங்கை அரசாங்கம் உடனடியாகவே நிராகரித்தது. இச்செயற்பாடு, இலங்கை அரசு தனக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கோ, குற்றவாளிகளை தண்டிப்பதற்கோ ஒரு போதும் தயாராக இல்லை என்பதனை இக்காணொளி வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே, சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தக் கோருவதனை மையப்படுத்திய பிரேரணை அமெரிக்காவினால் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கை கொலைக்களங்கள் 2- தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் ஆவணப்படமானது, முள்ளிவாய்க்காலிலும் அதற்குப் பின்னரும் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நடவடிக்கைகளை ஆதரபூர்வமாக வெளிக்கொண்டுவருவதாக அமைந்துள்ளது.
தமிழ்மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட படுகொலைகள் பற்றிய மேலதிக ஆதாரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள சூழலில், ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையை, ஓர் முழுமையான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையாக வலியுறுத்தும் வகையிலான பிரேரணையாக மாற்றியமைத்து, அதனை நிறைவேற்றுவதற்கு தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட சகல தரப்புக்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேண்டிக்கொள்கிறது.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons