flashvortex

Friday, March 9, 2012

சிரியாவில் இராணுவத் தலையீடு கூடாது என்கிறார் கோபி அனான்

சிரியாவில் எந்தவொரு வெளிநாட்டு இராணுவ தலையீடும் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று சிரியாவுக்கான ஐநா மற்றும் அரபு லீக்கின் சிறப்புத் தூதுவரான கோபி அனான் அவர்கள் எச்சரித்திருக்கிறார்.
இராணுவத்தை அங்கு பயன்படுத்துவது குறித்து எவரும் தீவிரமாக யோசிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
டமாஸ்கசுக்கான தனது விஜயத்துக்கான திட்டம் குறித்து பேசிய அவர், சிரியாவின் நெருக்கடி அரசியல் ரீதியாக மாத்திரமே தீர்த்து வைக்கப்பட முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிரிய மக்களின் அபிலாசைகளுக்கு மரியாதை கொடுக்கும் வகையிலான திர்ர்வு ஒன்று குறித்து ஆராயுமாறு சிரியாவின் அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் அவர் கேட்டிருக்கிறார்.

தயாரிப்புமுறையை' மாற்றும் கோலா நிறுவனங்கள்

பொதுவாக, நாம் அன்றாடம் சுவைத்து பருகும் பல குடிபானங்களிலும் திண்பண்டங்களிலும் காணப்படும் ஒருவகை நிறக்கலவைப் பதார்த்தம் தான் 4மீ எனப்படும் 4மெத்யில்இமிடாசோல் என்ற இராசயனப் பொருள்.
இது உடலில் சேர்வது புற்றுநோயைக் கொண்டுவரலாம் என்ற அச்சமிருப்பதால் குடிபானங்களிலும் தின்பண்டங்களிலும் அந்தக் கலவை இருப்பதற்கான எச்சரிக்கை பொறிக்கப்பட வேண்டும் என்று சட்டம் வந்துள்ளதாலேயே அவற்றின் தயாரிப்பில் உள்ள உட்சேர்க்கைப் பதார்த்தங்களில் மாற்றம் கொண்டுவர நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
ஆனால் பொதுவாக கார்சினோஜன் பொருட்கள், அதாவது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் என சில இரசாயனப் பதார்த்தங்களை பட்டியல் படுத்தியுள்ள அமெரிக்காவின் கலிபோனிய அரசு, அந்தப்பட்டியலில் 4மெத்யில்இமிடாசோல் ஐயும் சேர்த்துள்ளது. இதனால் இந்தப் பொருட்கள் காணப்படும் குடிபானங்கள் குறிப்பாக கொக்ககோலா மற்றும் பெப்சி போன்ற பானங்களும் இந்த புற்றுநோய் எச்சரிக்கை அறிவித்தலை தாங்கிவரவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எலிகளில் ஏற்படும் ஒருவகைப் புற்றுநோய்க்கும் இந்த இரசாயனப் பொருட்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அவை மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்கான சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
ஆனால் இந்த அறிவித்தலை 'விஞ்ஞான ரீதியில் உறுதிசெய்யப்படாதது' என்று சுட்டிக்காட்டியிருக்கின்ற கொக்ககோலா நிறுவனம், அப்படியான எச்சரிக்கையை தாங்கிவருவதை தவிர்ப்பதற்காக அவற்றின் தயாரிப்புமுறையை மாற்றியமைக்குமாறு அதன் தொழிற்சாலைகளுக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை, பரிசோதனைக் கூடத்தில் சோதிக்கப்பட்டுள்ள எலிகளில் புற்றுநோயை ஏற்படுத்தியுள்ள இந்த இராசயனப் பொருளின் அளவைப் பார்க்கும்போது, மனிதரில் அதனை பரிசோதனை செய்ய ஒருவர் 1000 கான்களுக்கும் அதிகமாக கொக்ககோலா பருகியிருக்க வேண்டும் என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கட்டுப்பாட்டு நிறுவனம் கூறியுள்ளது.
இப்போதைக்கு கலிபோர்னியாவில் தமது தயாரிப்புகளில் மாற்றம் கொண்டுவந்தி்ருப்பதாகக் கூறியிருக்கும் கொக்ககோலா மற்றும்பெப்சிகோ நிறுவனங்கள், அவற்றின் மற்ற ஆலைகளிலும் தயாரிப்புமுறையில் மாற்றம் வரும் என்று அறிவித்துள்ளன.
இதேவேளை, புதிய மாற்றத்தால் தமது தயாரிப்புகளின் சுவையில் எந்த வித்தியாசமும் இருக்காது என்றும் இந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திராவிட் ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும். சக இந்திய வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக டெஸ்ட் போட்டிகளில் உலகில் இரண்டாவது அதிக ரன் குவித்தவருமான ராகுல் திராவிட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
பெங்களூரில் வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்த திராவிட் சர்வதேசப் போட்டிகள், உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் போட்டிகள் ஆகியவற்றிலிருந்து தான் ஓய்வு பெறுவதாகக் கூறினார்.
திராவிட்டின் சாதனைகள்
டெஸ்ட் போட்டிகளில் உலகிலேயே அதிக கேட்சுகளைப் பிடித்தவர் என்ற சாதனைக்கும் இவரே சொந்தக்காரர். விக்கெட் கீப்பராக இல்லாமல் ஃபீல்டராக இருந்தபடியே டெஸ்டில் மொத்தம் 210 கேட்சுகளை இவர் பிடித்துள்ளார்.1996 இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கியவர் திராவிட். 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,288 ரன்களை திராவிட் எடுத்துள்ளார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 36 சதங்களையும் அடித்துள்ளார்.
மிக நேர்த்தியாக தடுத்தாடக்கூடியவர், இவரை அவுட்டாக்குவது கடினம் என்பதால், இவருக்கு பெயரே தி வால், அதாவது 'சுவர்' என்றானது.
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இவர் கடந்த செப்டம்பரில் ஓய்வுபெற்றிருந்தார்.
கிரிக்கெட்டின் அந்த வடிவத்திலும் உலகின் முன்னணி ரன் குவிப்பாளர்களில் ஒருவர் திராவிட். 344 ஆட்டங்களில் விளையாடி, 12 சதங்களை அடித்து, மொத்தத்தில் 10,889 ரன்களை அவர் எடுத்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 196 கேட்சுகளைப் பிடித்திருப்பவர் இவர்.
சர்வதேச டுவெண்டி டுவெண்டி ஆட்டங்கள் என்று எடுத்துக்கொண்டால், இவர் ஒரேயொரு ஆட்டத்தைத்தான் விளையாடியுள்ளார்.
சுமார் இரண்டு வருட காலம் இந்திய அணியின் தலைவராக விளங்கி 25 டெஸ்ட் போட்டிகளிலும் 79 ஒரு நாள் போட்டிகளிலும் திராவிட் கேப்டனாக இருந்துள்ளார்.
இவரது தலைமையின் கீழ் மேற்கிந்தியத் தீவுகளிலும் இங்கிலாந்திலும் இந்தியா டெஸ்ட் தொடர்களை வென்றிருந்தது.
இந்திய கிரிக்கெட்டின் முன்னணி நட்சத்திரமாக டெண்டுல்கர் மின்னிய அதேநேரத்தில் ராகுல் திராவிட் தனக்கேயுரிய தனி பாணியில் சத்தமில்லாமல் சாதனைகளைச் செய்துவந்துள்ளார் என்று கூறவேண்டும்.

சச்சின் கருத்து

திராவிட்டுக்கு சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். அவரைப் போன்ற ஒரு கிரிக்கெட் வீரரை, அணியின் சக வீரரை, உற்ற தோழனைக் காணமுடியாது என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்தியா படுதோல்வி அடைந்ததற்கும் ஓய்வு பெறும் தனது முடிவுக்கும் இடையில் நேரடித் தொடர்பு இல்லை. இந்தியா ஆஸ்திரேலியாவில் வென்றிருந்தாலும்கூட தான் இந்த முடிவையே எடுத்திருப்பேன் என திராவிட் குறிப்பிட்டுள்ளார்.
திராவிட் ஓய்வுபெற்றுள்ள நிலையில், இந்திய அணியில் இருக்கக்கூடிய மற்ற இரண்டு மூத்த வீரர்களான சச்சின் டெண்டுல்கரும், விவிஎக்ஸ் லக்ஷ்மணும் கூட சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வுபெறலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons