
எகிப்தில் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக், மக்களால் விரட்டப்பட்ட பின், தற்காலிக ஆட்சிப் பொறுப்பேற்ற ராணுவ உயர்மட்ட கவுன்சில், ஆறு மாதங்களுக்குள், பார்லிமென்ட் தேர்தல் நடத்துவதாக வாக்களித்தது. ஆனால், பார்லி தேர்தல் உட்பட, கவுன்சில் சொன்ன எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, ராணுவ ஆட்சிக்கு எதிராக, மக்கள் கடந்த நான்கு நாட்களாக, போராட்டம் நடத்தி வருகின்றனர். தாரிர் சதுக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. இதே போன்ற ஆர்ப்பாட்டம், அலெக்சாண்டிரியா மற்றும் சூயஸ் நகரங்களிலும் நடந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு நடத்தினர்.
இதில், 30 பேர் பலியாகினர்; 1,700 பேர் காயமடைந்தனர். எகிப்தில் பொதுத் தேர்தலை, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்படும் என, ராணுவ உயர்மட்ட கவுன்சில் உறுதியளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை, ராணுவ உயர்மட்ட கவுன்சில் தலைவர் முகமது உசைன் தந்தாவி வெளியிட்டார். கெய்ரோவின் தாரிர் சதுக்கத்தில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கூடி தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று இடைக்கால பிரதமர் எசம் ஷரப் மற்றும் அவரது அமைச்சரவையினர், ராணுவ உயர்மட்ட கவுன்சிலிடம் தங்கள் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளனர். இவர்களது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. இருப்பினும், ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம், எகிப்தின் பல நகரங்களிலும் தீவிரமடைந்து வருகிறது.




3:44 AM
jana
Posted in: 



