flashvortex

Thursday, March 8, 2012

தமிழர்களின் நலன் சார்ந்து இந்தியா முடிவெடுக்கும்

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தின் மீது இந்தியா தமிழர்களின் நலனை மனதில் கொண்டு ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் என்று இந்தியப் பிரதமர் அலுவலகத் துணை அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்தார்.
இத்தீர்மானம் குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் ஒருமித்த கருத்தையே வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்த நாராயணசாமி, தானும், அமைச்சர் ஜி.கே.வாசனும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனனை சந்தித்து இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும்போது, தமிழ் நாட்டின் உணர்வுகளை மனதில் கொண்டு , இந்தியா இலங்கைக்கு எதிராகவே வாக்களிக்கவேண்டும் என்று வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

மன்மோகன் சிங்


இந்த தீர்மானத்தில் இந்திய அரசு திறந்தமனதுடன் இருப்பதாகவும், தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.அதே போல இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கையும் தான் நேரில் சந்தித்து இதே நிலைப்பாட்டை வலியுறுத்தியதாகவும், பிரதமரும் அதைப் பரிவுடன் கவனிப்பதாகக் கூறியதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் இலங்கை மீது பெரும் செல்வாக்கு இருப்பதாகக் கருதப்படும் இந்திய அரசு, போருக்கு பின்னர்,இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணும் விஷயத்திலோ அல்லது, போரினால் ஏற்பட்ட மனித நேயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விஷயத்திலோ, இலங்கை அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவில்லை என்ற விமர்சனங்களை அமைச்சர் நாராயணசாமி மறுத்தார்.
இலங்கை அரசு ஒரு சுதந்திரமான நாடு, அதன் உள்விவகாரங்களில் ஒரு வரம்புக்குள்ளேயே இந்தியா தலையிட முடியும். தீர்வு காணுங்கள் என்று வலியுறுத்தலாமே தவிர வற்புறுத்தமுடியாது என்றார். ஆனால் மனித நேயப் பிரச்சினைகளில் தமிழர்களுக்கு ஆதரவாக இலங்கை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

இலங்கை குறித்த அமெரிக்கத் தீர்மானம் சமர்ப்பிப்பு

இலங்கை விவாகாரம் தொடர்பாக ஐ நா சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளது.
பயங்கரவாத்த்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஒரு நாடு எடுக்கும் போது அது, மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனம், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச இணக்கப்பாடுகள், அகதிகள் மற்றும் மனிதநேய சட்டங்கள் மற்றும் இது சம்பந்தமான பிற சட்டங்களுக்கு உட்பட்டுதான் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இலங்கை அரசால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இலங்கையின் தேசிய நல்லிணக்கத்துக்கு உதவக் கூடும் என்று அந்தத் தீர்மானம் கூறுகிறது.

குறிப்பாக அத்தீர்மானம் மூன்று கருத்துக்களை வலியுறுத்துகிறது.சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் நடைபெற்றது மற்றும் பலவந்தமாக கடத்தப்பட்டு காணமல் போவது போன்றவை தொடர்பில் நம்பகத் தன்மை வாய்ந்த விசாரணை வேண்டும் என்றும் வட பகுதியில் இருந்து படையினரை விலக்கிக் கொள்வதுடன் அதிகாரப் பகிர்வு அளித்து அரசியல் தீர்வு காண வேண்டும் என்றும் ஆணைக் குழு அளித்த பரிந்துரைகளை வரவேற்பதாகக் கூறும் அமெரிக்கா அதே நேரம் அக்குழு சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளது குறித்த விடயங்களை சரியாக ஆராயவில்லை என்று கவலைதெரிவித்துள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும். இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் நீதி, சமத்துவம், பொறுப்புடைமை மற்றும் நல்லிணக்கம் கிடைப்பதை உறுதி செய்யக் கூடிய சட்டரீதியான மேலதிகல நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டாவதாக ஆணைக்குழுவின் பரிந்துறைகளை நடைமுறைப்படுத்தவும், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டது குறித்து ஆராயவும் இலங்கை அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இனி எடுக்க உத்த்தேசித்துள்ள நடவடிக்கைகள் பற்றி இலங்கை அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது
மேற்படி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகளை மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகரின் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட விசேட தொடர்புடைய நடைமுறைகள் வழங்குவதையும் அவற்றை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதையும் இத் தீர்மானம் ஊக்குவிக்கிறது. அத்துடன் அத்தகைய உதவி வழங்கல் குறித்து ஐ நா மனித உரிமை பேரவையின் 22 ஆவது கூட்டத்தொடரில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தை அமெரிக்கத் தீர்மானம் கோரியுள்ளது.
அதே நேரம் இலங்கை அரசுக்கு எதிரான விமர்சனங்கள் ஏதும் இதில் இடம்பெறவில்லை.

புடின் வெற்றியை எதிர்த்து போராட எதிர்க் கட்சிகள் முடிவு

ரஷ்ய அதிபர் தேர்தலில், புடின் வெற்றி பெற்றதை எதிர்த்து, தொடர் போராட்டம் நடத்த, எதிர்க் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

ரஷ்யாவில், கடந்த 4ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. ஐக்கிய ரஷ்ய கட்சி சார்பில், பிரதமர் புடின் மூன்றாவது முறையாக, அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.கடந்த டிசம்பர் மாதம் நடந்த ரஷ்ய பார்லிமென்ட் தேர்தலில், ஏராளமான தில்லு முல்லு நடந்தது. இதே போல, தற்போது நடந்த தேர்தலிலும், புடின் ஆதரவாளர்கள் நிறைய தில்லு முல்லு செய்து ஓட்டு போட்டதாக, எதிர்க் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

தேர்தலின் போது நடந்த தில்லு முல்லுகளை எதிர்த்து போராட்டம் நடத்திய, 250 பேர் மாஸ்கோவில் கைது செய்யப்பட்டனர். இவர்கள், நேற்று விடுவிக்கப்பட்டனர்.இதற்கிடையே, முறைகேடாக வெற்றி பெற்றுள்ள புடினின் வெற்றியை எதிர்த்து, தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும், எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை, மாஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் தொடரும்' எனவும், போராட்டத் தலைவர் அலெக்சி நாவால்நி தெரிவித்துள்ளார்.

சீனா தலையீடு - தொடரும் திபேத்தியர்கள் தற்கொலை

திபெத் நாட்டின் சீனாவின் தலையீட்டை எதிர்த்தும் தலாய்லாமாவை திபெத்திற்கு அனுமதிக்குமாறும் தெரிவித்து மேலும் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துண்டுள்ளார்.

முன்னர் 4வயது மகளுடன் தாயும் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது 3 நாட்களுக்குள் மற்றுமொருவர் தீக்குளித்துள்ளார்.

18 வயதான மாணவர் ஒருவர் சீன அரசுக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியபடி அரச கட்டிடத்திற்கு அருகின் தீயை பற்ற வைத்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

2009 ஆம் ஆண்டிலிருந்து திபெத்திய தலைவர் தலாய்லாமாவை நாடுதிரும்ப அனுமதிக்குமாறு கோரி இதுவரை 26 பேர் தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகின்றது.

பாகிஸ்தானிலிருந்து வெளியேர ஒசாமா குடும்பத்தினர் தயார்

சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடனின் மனைவிகள் மற்றும் குழந்தைகள், பாகிஸ்தானை விட்டுப் புறப்படத் தயாராகி வருகின்றனர்.

நியூயார்க் இரட்டை கோபுரத் தகர்ப்புக்குக் காரணமான சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின் லாடன், பாகிஸ்தானின் அபோதாபாத்தில் கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து அவரது மனைவிகள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் ஆகியோர் பாகிஸ்தானில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் ஒசாமாவின் ஏமன் நாட்டை சேர்ந்த இரண்டு மனைவிகளை அழைத்து செல்ல ஏமன் நாட்டிலிருந்து ஒசாமாவின் மைத்துனர்கள், இஸ்லாமாபாத் வந்துள்ளனர். ஒசாமா குடும்பத்தினர் அனைவரும் பாகிஸ்தானை விட்டு புறப்படுவதற்குரிய ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இவர்களுக்குப் பாதுகாப்புப் படையினர் பலத்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இரண்டொரு நாளில் ஒசாமா குடும்பத்தினர் பாகிஸ்தானை விட்டு சென்று விடுவார்கள்.

அபோதாபாத்தில் ஒசாமா கொல்லப்பட்ட வீட்டை பொது மக்கள் அடிக்கடி வந்து பார்த்து செல்வதால், அந்த வீடு கடந்த வாரம் இடித்து தரை மட்டமாக்கப்பட்டு விட்டது.

சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீடு தவறான யோசனை : ஒபாமா

சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீட்டினை நேரடியாக மேற்கொள்வது, தவறானது என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

சிரியாவின் தற்போதைய நிலைமை அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. எனினும் லிபியாவை போன்று
அமெரிக்காவின் நேரடி இராணுவ தலையீடு, தவறானதாக இருக்கும். சிரியாவை அனைத்து விதத்திலும் தனிமைப்படுத்துவதன் மூலமே அந்நாட்டின் அதிபர் பஷார் அல் அசாத்தை பதவியிலிருந்து விலக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

2012ம் வருடத்தின் முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஒபாமா இக்கருத்துக்களை கூறியிருந்தார். சிரியாவை போன்று அமெரிக்க இராணுவம் நேரடியாக களமிறங்கி சிரிய இராணுவத்தின் அராஜக நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என அமெரிக்க செனட்டரும், 2008ம் ஆண்டு, பாரக் ஒபாமாவின் எதிர்ப்பாளருமான ஜோன் மெக்கெய்ன் கோரியிருந்தார்.
இந்நிலையிலேயே லிபியாவை சிரியாவுடன் ஒப்பிடக்கூடாது. சிரியாவின் நிலைமைகள் மிகவும் பாரதூரமானவையாக இருப்பதாக ஒபாமா கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் பனிப்பாறை சரிவு விபத்து : 37 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நேற்று இடம்பெற்ற பனிப்பாறை சரிவு விபத்தில் (Avalanche) 37 பேர் பலியாகியிருப்பதுடன், மேலும் பலர் காயமடந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் பதக் ஷாகானா மாகாணத்தின் மலைப்பகுதிகளிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு என்றும் இல்லாத அளவில், இம்முறை ஆப்கானிஸ்தான் கடும் குளிராலும், பனிமூட்டத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளும், பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பலர் பனிப்பாறைகளின் கீழ் சிக்கி காணாமல் போயிருக்கலாம் என்ற அச்சம் காரணமாக மீட்பு பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.

பெண்களை ஊக்குவிக்க ஒளவையார் விருது: ஜெயலலிதா

பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஒளவையார் விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

 சர்வதேச மகளிர் தினத்தன்று சிறந்த பெண்மணி ஒருவருக்கு விருதினை அளிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

 புதன்கிழமை அவர் வெளியிட்ட மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் ஒளவையார் விருது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாழ்த்துச் செய்தி விவரம்:

 நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் என்று இருக்கும் நிலையில், பெண்ணினம் புறக்கணிக்கப்பட்டால் நாடு முன்னேற முடியாது. சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்களவையில் நிறைவேற்ற முடியாததால் சட்டமாக்கப்படவில்லை என்பது வருத்தத்துக்கு உரியது.

 பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோர் வகுத்துத் தந்த சமதர்ம சமுதாயக் கொள்கையின்படி, பெண்கள் கல்வி அறிவைப் பெற்று அதன் மூலம் வேலைவாய்ப்பை எய்தி பொருளாதார முன்னேற்றம் அடையும் வகையில் மகளிர் முன்னேற்றத்துக்கான பல நல்ல திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

 தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், இந்தியாவிலேயே முதன் முதலாக மகளிர் காவல் நிலையங்கள், அனைத்து மகளிர் அதிரடிப்படை மற்றும் அனைத்து மகளிர் காவல் படை, வீரதீர பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது என பல்வேறு மகளிர் நலன் பயக்கும், பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் திட்டங்கள் எனது முந்தைய ஆட்சிக் காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.

 ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையுடன், 4 கிராம் தங்கக் காசும் இப்போது வழங்கப்பட்டு வருகிறது. பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கான உதவித் தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி, 4 கிராம் தங்கக் காசும் வழங்க உத்தரவிட்டுள்ளேன். சமையலறையில் பெண்களின் பளுவைக் குறைக்கும் வகையில் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் ஃபேன் ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன.

 ஒளவையார் விருது: பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஒளவையார் விருது எனும் உயரிய விருதை சிறந்த பெண்மணி ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விருது வரும் ஆண்டு முதல் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons