flashvortex

Friday, December 9, 2011

ஒருநாள் போட்டியில் ஷேவாக் உலக சாதனை



இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் ஒரு நாள் போட்டிகளில் அதிக அளவு ஓட்டங்களை எடுத்து உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தோர் நகரிலுள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 219 ஓட்டங்கள் எடுத்து அவர் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களைப் பெற்றிருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஷேவாக் முறியடித்துள்ளார்.



கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இதே மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியர் மைதானத்தில் 200 ஓட்டங்களை பெற்று டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதிரடி ஆட்டம்


விரேந்தர் ஷேவாக் 149 பந்துகளில் 219 ஓட்டங்களை எடுத்தார். இதில் 25 பவுண்ட்ரிகளும் 7 சிக்சர்களும் அடங்கும். எனினும் ஷேவாக் 170 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் டாரன் சாமி அவரை ஆட்டமிழக்கச் செய்யக் கூடிய ஒரு சுலபமான வாய்ப்பை தவறவிட்டார்.

இதற்கு முன்னர் ஷேவாக் விளையாடியுள்ள 239 ஒரு நாள் போட்டிகளில், ஒன்றில் அவர் எடுத்திருந்த அதிகபட்சமான ஓட்டங்கள் 175.

இந்தியாவின் சார்பில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு இன்னிங்ஸில் அதிக ஓட்டங்கள் எடுத்துள்ளவர் ஷேவாக். 2008 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலேயே ஷேவாக் அந்த ஓட்டங்களை எடுத்தார்.

இறுதியாக இந்திய அணி எதிர்கொண்ட 47 ஆவது ஓவரின் போது, கெய்ரன் பொல்லார்டின் பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரரான ஆண்டனி மார்ட்டின் அவர்களிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தியா இந்தப் போட்டியின் தனது ஐம்பது ஓவர்களில் ஐந்து ஆட்டக்காரர்களை இழந்து 418 ஓட்டங்களை எடுத்தது. இதுதான் இந்தியா ஒரு நாள் போட்டி ஒன்றில் எடுத்துள்ள அதிகபட்ச ஓட்டங்கள்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விரேந்தர் ஷேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவர் மட்டுமே இரட்டை சதம் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக ஐந்து போட்டிகளை கொண்ட தொடரின் நான்காவது ஆட்டத்திலேயே ஷேவாக் இந்த உலகச் சாதனையைப் படைத்துள்ளார். இந்தோரில் இடம்பெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இந்தத் தொடரில் இந்தியா 3-1 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இறுதிப் போட்டி எதிர்வரும் 11 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons