flashvortex

Thursday, March 1, 2012

ஈரான் எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டாம்: அமெரிக்கா கோரிக்கை

இந்தியா, சீனா மற்றும் துருக்கி நாடுகள், ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவைக் குறைத்துக் கொள்ளும்படி மிகவும் அழுத்தமாக வெளிப்படையாக அமெரிக்கா கோரியுள்ளதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்து சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, உலக அரங்கில் அந்நாட்டைத் தனிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளிடம் பேசி, இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று காங்கிரஸ் சபையில் அமைச்சர் ஹிலாரி கிளின்டன் பேசியதாவது:இந்தியா, சீனா மற்றும் துருக்கி நாடுகள், ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய் அளவைக் குறைக்க வேண்டும் என, அமெரிக்கா அழுத்தமாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.அந்நாடுகள் அமெரிக்கா சொல்வதின்படி செய்ய வேண்டுமெனில், அதற்காக நாம் மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.எனினும், சில நாடுகள் ஈரானை விட்டு விலகுவது என்பது கடினம்தான். அதனால், அந்நாடுகளுக்கு ஏற்படும் இழப்புகளை வேறு வழிகளில் சரிக்கட்ட நாம் உதவ வேண்டும்.இவ்வாறு ஹிலாரி தெரிவித்தார்.

காங்கிரஸ் சபையில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா, "ஈரான் யுரேனியச் செறிவூட்டலைத் துவங்கிவிட்டது. எனினும் அணு ஆயுதங்கள் தயாரிப்பதா வேண்டாமா என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை' என்றார்.

இதற்கிடையில், ஈரானின் சில வங்கிகள் மீது அமெரிக்கா மேலும் சில பொருளாதாரத் தடைகளை விதிக்கத் திட்டமிட்டிருப்பதை அடுத்து, அந்த வங்கிகள் உடனான வர்த்தக உறவுகளை நிறுத்தி விடுவதாக, துபாயில் செயல்படும் நூர் இஸ்லாமிய வங்கி தெரிவித்துள்ளது.
 

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons