flashvortex

Friday, March 2, 2012

அரசின் இரட்டை வேடத்தின் அர்த்தம் என்ன?: கிரியெல்ல _

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவோம் என ஜெனீவாவில் உறுதி மொழி வழங்கும் அரசாங்கம் உள்நாட்டில் இதற்கெதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது. இந்த இரட்டை வேடத்தின் அர்த்தம் தான் என்ன? என கேள்வியெழுப்பும் ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல, உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதில்லை என்பதால் இந்தியாவும் சர்வதேசமும் இம்முறை அரசாங்கத்தை நம்பத் தயாராக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இதனைத் தெரிவித்தார். 


இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் :

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சிறப்பம்சங்களைக் கொண்டதாக உள்ளன. நாட்டிலுள்ள ஆயுதக் குழுக்கள் களையப்பட வேண்டும். அரச பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரண்டு விடயங்களை முன் வைத்தே அமெரிக்கா ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் பிரேரணையை முன் வைக்கவுள்ளது.

இதில் பாரதூரமான விடயங்கள் எதுவும் இல்லை பரிந்துரைகளை அமுல் செய்தால் அதற்கு ஐ.தே. கட்சி ஆதரவு வழங்கும். ஆயுதக் குழு களையப்படுதல் அரச பயங்கரவாதம் நீக்கப்படுதல் என்பன எம் எல்லோருக்கும் நன்மை பயக்கும் விடயங்களாகும்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் அதிலுள்ள பரிந்துரைகள் எதுவும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களிலும் சர்வதேசத்திற்கு பல உறுதி மொழிகளை அரசாங்கம் வழங்கியது.

ஆனால் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திலேயே அமெரிக்கா ஜெனீவாவில் எமக்கெதிராக பிரேரணையை கொண்டு வந்தது. பரிந்துரைகளை நிறைவேற்ற கால அவகாசத்தையும் அமெரிக்கா பிரேரித்துள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாகவே சர்வதேசம் நம்பிக்கையிழந்துள்ளது. அதன் வெளிப்பாடே ஜெனீவா பிரேரணையாகும்.

அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுமென ஜெனீவாவில் பகிரங்கமாக தெரிவிக்கின்றனர்.

ஆனால் உள்நாட்டில் இதற்கு எதிராக அரசாங்கம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. வெளிநாட்டில் ஒரு வேடம், உள்நாட்டில் ஒரு வேடம் அரசாங்கத்தின் இந்த இரட்டை வேடத்தின் அர்த்தம் தான் என்ன ?

ஜெனீவா என்ற பிசாசை உருவாக்கி அதனை பூதாகரமாக்கி மக்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது அரசாங்கம். ஏனென்றால் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தினால் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் திரும்பியுள்ளனர். இதனை மறைத்து மக்களை திசை திருப்பவே ஜெனீவா நாடகம் அரங்கேற்றப்படுகிறது.

இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஆளுநர்கள் அரசாங்க அதிகாரிகள் ஏன் பாலர் பாடசாலை பிள்ளைகளும் கலந்து கொள்கின்றனர். இவர்களின் பெரும்பாலானோருக்கு எதற்கு இந்த ஆர்ப்பாட்டம் என்பதே தெரியாது.

இவையனைத்தையும் கைவிட்டு காலத்தை கடத்தாது பரிந்துரைகளை நிறைவேற்றி அரசியல் தீர்வைக் கண்டு நாட்டில் சட்டம், நீதியை நிலை நாட்டினால் சர்வதேசத்துடன் இணைந்து நம்பிக்கையுடன் செயற்பட முடியும்.

சர்வதேச விசாரணையை நாம் எதிர்க்கின்றோம் ஆனால் உள்ளக விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்றே ஐ.தே. கட்சி வலியுறுத்துகின்றது என்றார். _

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons