flashvortex

Wednesday, March 14, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: என்ன செய்யப் போகிறது தி.மு.க.,?

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், மத்திய அரசு போகிற போக்கைப் பார்த்தால், இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தான் ஓட்டளிக்கும் போல் தெரிகிறது. இதனையடுத்து இநத விவகாரத்தில் தி.மு.க., என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியாவின் நிலை என்ன என்று, லோக்சபாவிலும், தி.மு.க., அ.தி.மு.க., எம்.பி.,க்கள் கூச்சல், ரகளையில் இறங்கினர். ஆனால், பிரணாப் முகர்ஜி பேச ஆரம்பித்ததும், திமுக எம்.பி.,க்கள் இருக்கைகளுக்கு திரும்பினர். அ.தி.மு.க.,வினரும் அமைதியாயினர். ஆனால், "எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது' என்று, பிரணாப் முகர்ஜி பதிலளித்தார்.
போர்க் குற்றங்களை நிகழ்த்தியதற்காக, இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து, ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில், லோக்சபாவில் இப்பிரச்னை வெடித்தது. காலையில், சபை துவங்கியதும் தி.மு.க., எம்.பி.,க்கள், இந்த பிரச்னை குறித்து குரல் கொடுத்தனர். டி.ஆர்.பாலு முதலில் எழுந்து பேச ஆரம்பிக்க, இளங்கோவன், ஆதிசங்கர், தாமரை செல்வன் ஆகியோர், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். அ.தி.மு.க., எம்.பி.,க்கள் தம்பிதுரை சைகை காட்டியதும், மணியன், குமார், ஆனந்தன், சுகுமார், ராஜேந்திரன் ஆகியோரும், சபாநாயகர் இருக்கையை சூழ்ந்தனர். கைகளில் பத்திரிகை செய்திகள் மற்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது நிலை என்ன என்று கேட்டு, வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் இருந்தன. இவர்களோடு, திருமாவளவன், லிங்கம் ஆகியோரும் இணைந்து கொண்டு, கோஷங்கள் எழுப்பினர் . அப்போது, அமைச்சர் நாராயணசாமி வந்து, காதில் ஏதோ சொன்னவுடன், அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேச எழுந்தார். இவர் எழுந்த மறுகணம், தி.மு.க., எம்.பி.,க்கள் அமைதியாயினர். அ.தி.மு.க., எம்.பி.,க்கள் மட்டும் நின்று, சில நிமிடங்கள் கோஷங்களை தொடர்ந்தனர்.

அமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த விளக்கம்: தீர்மானம் எப்போது வரப்போகிறது என்பதே தெரியவில்லை. தவிர, எந்தவொரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராகவும் கொண்டு வரப்படும், எந்த தீர்மானத்தையும், இந்தியா பொதுவாக ஆதரித்ததில்லை. இருப்பினும், இப்பிரச்னை குறித்து, ஏற்கனவே தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. விரைவில், உரிய முறையில் ஆலோசித்து முடிவெடுத்து, அதை சபையில் தெரிவிக்கப்படும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

ஞானதேசிகன் சந்திப்பு: இந்த சூழ்நிலையில், ஞானதேசிகன் தலைமையில், தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்கள் அனைவரும் சேர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்தனர். இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை, இந்தியா ஆதரிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர். இதை கேட்டுக் கொண்ட பிரதமர், இதுகுறித்து ஆவன செய்வதாகக் கூறியதாக, இந்த எம்.பி.,க்கள் தெரிவித்தனர்.

என்ன செய்யப் போகிறது தி.மு.க.,? மத்திய அரசு போகிற போக்கைப் பார்த்தால், ஐ.நா., தீர்மானத்தில், இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தான் ஓட்டளிக்கும் போல் தெரிகிறது. அவை முன்னவரான பிரணாப் முகர்ஜி, அதைத் தான் சூசகமாக சொல்லியிருக்கிறார். இதன் மூலம், பல்வேறு பிரச்னைகளில் தி.மு.க.,வை நெருக்கடியில் தள்ளியதை போலவே, இந்தப் பிரச்னையிலும் தள்ளிவிட்டுள்ளது மத்திய அரசு. தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள், மத்திய அரசை வலியுறுத்துவதற்கும், தி.மு.க., வலியுறுத்துவதற்கும், அடிப்படையிலேயே வித்தியாசம் உண்டு. காங்கிரசின் கூட்டணி கட்சி மட்டுமல்ல, தி.மு.க., மத்திய அரசின் ஓர் அங்கமும் கூட. அக்கட்சி சார்பில், இப்போதும் ஐந்து மத்திய அமைச்சர்கள் இருக்கின்றனர். எனவே, வெறுமனே கடிதம் எழுதுவது, கோரிக்கை வைப்பது, ஜனாதிபதி முன் கோஷம் போடுவதோடு தி.மு.க., நின்றுவிட முடியாது. அதையும் தாண்டி அந்தக் கட்சிக்கு பொறுப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும், அக்கட்சித் தலைவர் கருணாநிதி, "தமிழினத் தலைவர்' என தொண்டர்களால் அழைக்கப்படுபவர். ஏற்கனவே, "இறுதிக்கட்டப் போரில் தலையிட்டு, இனப்படுகொலையை நிறுத்தவில்லை' என்ற ஆதங்கம், தி.மு.க., மீது தமிழ் ஆர்வலர்களுக்கு இருக்கிறது. அந்தக் கறையைத் துடைத்தெறிவதற்கான எந்த சந்தர்ப்பத்தையும் தி.மு.க., பயன்படுத்திக் கொள்ளவும் இல்லை. இப்போது, இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி, தி.மு.க., அமைச்சர்கள் பதவி விலகலாம்; அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறலாம்; ஒட்டுமொத்த எம்.பி.,க்களும் ராஜினாமா செய்யலாம். எதுவுமே இல்லையெனில், "இறுதியோ இறுதி கோரிக்கை' என, இன்னொரு கடிதம் எழுதலாம். தி.மு.க., என்ன செய்கிறதோ, அதற்கேற்ப தான் அந்தக் கட்சி மீதான மதிப்பீடும் இருக்கும். என்ன செய்யப் போகிறது தி.மு.க.,?

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons