வரும் ஜூன் மாதத்திற்குப் பின், படிப்படியாக மின்வெட்டு குறையும். அடுத்த ஆண்டு மின்வெட்டு இல்லாத மாநிலமாகவும், வரும் 2014ம் ஆண்டு, தேவைக்கு மீறிய மின் உற்பத்தி செய்யும் மாநிலமாகவும் தமிழகம் மாறும்'' என்று, மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.மரபுசாரா எரிசக்தி குறித்த சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், நேற்று துவங்கியது.
கருத்தரங்கை துவக்கி வைத்த, மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: தென்மாநிலங்களில் கடும் மின் பற்றாக்குறை உள்ளது. இதில், தமிழகம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையை தீர்க்க, முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். வரும் ஜூன் மாதம் முதல், மின்வெட்டு படிப்படியாக குறையும். 2013-14ம் ஆண்டில் மின்வெட்டு இல்லாத மாநிலமாகவும். 2014-15ம் ஆண்டு, தேவைக்கு மீறிய மின் உற்பத்தி செய்யும் மாநிலமாகவும் தமிழகம் மாறும். இந்த நிலையை எட்ட, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமான மின் உற்பத்தியை பெறுவது முக்கியமாகும். தமிழகத்தில் மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவதில், பல்வேறு இடையூறுகள் உள்ளன.
நீர் மின் உற்பத்தி திட்டத்திற்கு நீர் பற்றாக்குறை, அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி பற்றாக்குறை, கோர், காஸ் என மின் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த சூழலில், மரபுசாரா எரிசக்தியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, முதல்வர் விரும்புகிறார். இதில், மூலப்பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லை.தமிழகத்தில் காற்றாலை மூலம், 6,800 மெகாவாட் பெற முடியும். நாடு முழுவதும் உள்ள காற்றாலை மின் உற்பத்தியில், இது 42 சதவீதம். தமிழகத்தில் மரபுசாரா எரிசக்தியை மேம்படுத்த, மத்திய அரசின் உதவி கிடைப்பதில்லை. சோலார், காற்றாலை, பயோகாஸ் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு நிதி உதவி செய்ய வேண்டும்.ஜவகர்லால் நேரு சோலார் மிஷன் திட்டத்தின் மூலம், கடந்த ஆண்டு 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மத்திய அரசு திட்டமிட்டது. இதில், தமிழகத்திற்கு ஏழு மெகாவாட் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு, 1,000 மெகாவாட்டாக இது உயர்ந்த போதிலும், தமிழகத்திற்கு, 22 மெகாவாட்டிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மரபுசாரா எரிசக்தி மூலம் மின் உற்பத்தி செய்ய, அதிகமான வசதிகள் உள்ளன. இதனால், இந்த வகையிலான மின் உற்பத்திக்கு, தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சோலார் மின் உபகரணம் பொருத்தப்பட்ட மூன்று லட்சம் பசுமை வீடுகளை அரசு கட்டி வருகிறது. சோலார் மூலம் ஒரு லட்சம் தெரு விளக்குகளை எரிய வைக்க திட்டமிட்டு, அதற்கான பணியும் நடக்கிறது.இதுபோன்று, முன்மாதிரி திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழகத்திற்கு, மத்திய அரசு உதவிட வேண்டும். அதேபோன்று, முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். அவர்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.இவ்வாறு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்




6:51 AM
jana

Posted in: 

0 comments:
Post a Comment