flashvortex

Wednesday, December 21, 2011

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் கட்சித் தலைவரானார்


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக மீண்டும் ரணில் விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நீண்டகாலம் கட்சியின் தலைவர் ரணிலுக்கு எதிரான பிரசாரங்கள் கட்சிக்குள் வலுத்து வந்த நிலையிலேயே தலைவர், துணைத் தலைவர் மற்றும் தேசிய அமைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு இன்று திங்கட் கிழமை தேர்தல் நடத்தப்பட்டது.

ரணிலை எதிர்த்துப் போட்டியிட்ட கரு ஜயசூரியவும் தேசிய அமைப்பாளர் பதவிக்குப் போட்டியிட்ட தயாசிறி ஜயசேகரவும் தோல்வி கண்டுவிட்டார்கள் என்று திங்கட்கிழமை மாலை தொலைபேசிகளுக்கு குறுஞ் செய்திகள் வரத்தொடங்கியது தான் தாமதம், அதுவரை கட்சித் தலைமையகமான ஸ்ரீகோத்தவுக்கு முன்பாக ரணில் எதிர்ப்பு கோஷங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் வன்முறைகளில் ஈடுபடத் தொடங்கினர்.
அதன்பின்னர் பொலிசார் வரவழைக்கப்பட்டதும், ரணில் அணியினரை எதிர்த்துப் போட்டியிட்ட கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரின் வேண்டுகோளின் பின்னரே அங்கிருந்து கூட்டத்தை கலைக்க முடிந்தது.



இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இதுவரை காலமும் நிலவிவந்த தலைமைத்துவப் பிரச்சனை இன்று அதன் உச்சத்தை தொட்டிருந்தது.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் அதிக காலம் கட்சியின் தலைவராக இருந்துவந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு கடந்த சில ஆண்டுகளாக ஆளுங் கட்சியை எதிர்கொள்வதை விட கட்சிக்குள்ளேயே இருந்துவந்த எதிர்ப்புகளை சமாளிக்கவே போதும்போதும் என்றாகிவிட்டது.

கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும் என்ற கூறி வந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச தலைமைக்கு வர விரும்புகிறார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த பல மாதங்களாகவே அவர் கட்சிக்குள்ளிருக்கும் மூத்த தலைவர்களில் ஒருவரான கரு ஜயசூரியவை தலைமையை பொறுப்பேற்குமாறு கோரி வந்தார்.

தான் தான் தொடர்ந்தும் தலைவராக இருப்பேன் என்று பிடிவாதமாக இருந்துவந்த ரணில் விக்ரமசிங்க, போராட்டங்கள், சத்தியாகிரகங்கள் என்று கடுமையான எதிர்ப்பை சம்பாதித்திருந்த நிலையில் இறுதியாக வாக்கெடுப்பு நடத்தித்தான் தீரவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.

2007ம் ஆண்டில் ரணிலின் தலைமையை எதிர்த்து அமைச்சுப் பொறுப்பேற்று, ஆளும் மகிந்த அரசுடன் இணைந்த கரு ஜயசூரிய 2008ம் ஆண்டின் இறுதியில் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவராக இணைந்துகொண்டார்.

இந்த நிலையிலேயே ரணிலுக்கு எதிரான மாற்றுத் தலைமை இவராகத் தான் இருக்க முடியும் என்று சஜித் பிரேமதாச பிரசாரம் செய்துவந்தார்.

ஆனால், இன்று ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு நடத்திய தேர்தலில் மொத்தமாக அளிக்கப்பட்ட 94 வாக்குகளில் 68 வாக்குகளைப் பெற்று ரணில் விக்ரமசிங்கவே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.

அவரை எதிர்த்த கரு ஜயசூரியவால் செயற்குழுவில் 26 பேரின் ஆதரவைத் தான் பெறமுடிந்தது.

ஆனால் கட்சியின் துணைத் தலைவர் போட்டியில் ரணில் ஆதரவாளர் ரவி கருணா நாயக்கவை 8 வாக்குகளால் தோற்கடித்து சஜித் பிரேமதாசவே வெற்றி பெற்றுவிட்டார்.

மறுபுறத்தில் தேசிய அமைப்பாளருக்கான போட்டியில் ரணில் ஆதரவாளர் தயா கமகே வெற்றி பெற்றிருக்கிறார்.

நீண்ட இழுபறிக்குப் பின்னர், தலைமைத்துவத்தை தக்கவைத்துக் கொள்ள முடிந்தமை ரணிலுக்கு சற்று ஆறுதலை அளித்தாலும் இதுவரையில் கரு ஜயசூரியவுடன் துணைத் தலைமையை பகிரவேண்டிய நிலையில் இருந்த சஜித் பிரேமதாச ஒற்றைத் துணைத் தலைவராக கட்சியின் படிநிலையில் முன்னேற்றம் கண்டிருக்கிறார்.

இனி ரணில் மற்றும் சஜித் அணியினரின் ஒத்துழைப்பு போக்கு எப்படி இருக்கிறது என்பதை வைத்துத்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நகரப் போகிறது.

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons