பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஒளவையார் விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தன்று சிறந்த பெண்மணி ஒருவருக்கு விருதினை அளிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
புதன்கிழமை அவர் வெளியிட்ட மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் ஒளவையார் விருது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாழ்த்துச் செய்தி விவரம்:
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் என்று இருக்கும் நிலையில், பெண்ணினம் புறக்கணிக்கப்பட்டால் நாடு முன்னேற முடியாது. சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்களவையில் நிறைவேற்ற முடியாததால் சட்டமாக்கப்படவில்லை என்பது வருத்தத்துக்கு உரியது.
பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோர் வகுத்துத் தந்த சமதர்ம சமுதாயக் கொள்கையின்படி, பெண்கள் கல்வி அறிவைப் பெற்று அதன் மூலம் வேலைவாய்ப்பை எய்தி பொருளாதார முன்னேற்றம் அடையும் வகையில் மகளிர் முன்னேற்றத்துக்கான பல நல்ல திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள், இந்தியாவிலேயே முதன் முதலாக மகளிர் காவல் நிலையங்கள், அனைத்து மகளிர் அதிரடிப்படை மற்றும் அனைத்து மகளிர் காவல் படை, வீரதீர பெண்மணிக்கு கல்பனா சாவ்லா விருது என பல்வேறு மகளிர் நலன் பயக்கும், பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் திட்டங்கள் எனது முந்தைய ஆட்சிக் காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.
ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையுடன், 4 கிராம் தங்கக் காசும் இப்போது வழங்கப்பட்டு வருகிறது. பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பெண்களுக்கான உதவித் தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி, 4 கிராம் தங்கக் காசும் வழங்க உத்தரவிட்டுள்ளேன். சமையலறையில் பெண்களின் பளுவைக் குறைக்கும் வகையில் விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் ஃபேன் ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன.
ஒளவையார் விருது: பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஒளவையார் விருது எனும் உயரிய விருதை சிறந்த பெண்மணி ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்க உத்தரவிட்டுள்ளேன். இந்த விருது வரும் ஆண்டு முதல் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.




8:47 AM
jana

Posted in: 

0 comments:
Post a Comment