flashvortex

Saturday, March 3, 2012

ஜெனிவாவில் தீர்மானம் மேற்கொள்ளப்படாவிட்டாலும் ரோம் உடன்படிக்கையில் கைச்சாத்திடாவிடினும் விசாரிக்கலாம்: அமைச்சர் விமல்

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் தீர்மானம் மேற்கொள்ளப்படாவிட்டாலும் ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடாவிட்டாலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை விசாரணைக்கு உட்படுத்தக்கூடிய மேலும் மூன்று வழிமுறைகள் சர்வதேசத்திடம் உள்ளன. எனவே சர்வதேச விசாரணைகளில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கு இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களால் மாத்திரமே முடியும் என்று அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். 

நாட்டின் அமைதியை சீரழிக்கும் வகையில் செயற்படும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் சூழ்ச்சிகளைக் கண்டித்து அடுத்த வாரத்தில் நாடளாவிய ரீதியில் எதிர்ப்புப் பேரணிகள் நடத்தப்பட உள்ளன. இதில் அனைத்து இன மக்களும் கட்சி பேதமின்றி கலந்து கொள்ள வேண்டும். உள்நாட்டில் இருந்து கொண்டு நாட்டிற்கு எதிராகப் பிரசாரங்களை மேற்கொள்ளும் துரோகிகளின் பேச்சுக்களுக்கு மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜெனிவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய தீர்மானங்களை அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. ரோம் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என்பதற்காக நாடு எதிர்நோக்கும் பாரிய ஆபத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.

ஏனெனில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படக்கூடிய சந்தர்ப்பங்களில் இரண்டு மட்டுமே ஜெனிவா தீர்மானமும் ரோம் பிரகடனமும் ஆகும். 1998 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டார நாயக்கவினால் சர்வதேசத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பிரகாரம் இலங்கையை விசாரிக்கக் கூடிய மேலதிகமாக மூன்று சந்தர்ப்பங்கள் உள்ளன.

எனவே நாட்டு மக்களால் மாத்திரமே சர்வதேசத்திடமிருந்து இலங்கையைப் பாதுகாக்க முடியும். புலிகளை தோல்வியடையச் செய்தமையால் சர்வதேச சூழ்ச்சிக்காரர்களுடன் இணைந்து கொண்டு உள்நாட்டில் இருக்கும் அரச சார்பற்ற நிறுவனத்தினர் பல அரசியல் வாதிகள் மற்றும் சிவில் அமைப்பினர் எனப் பலரும் நாட்டிற்கு எதிரான துரோகத்தனங்களில் இறங்கியுள்ளனர்.

புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளரான ருத்திர குமாருக்கு பாதுகாப்பைக் கொடுத்துக் கொண்டு மனித உரிமைகள் பற்றி அமெரிக்கா பேசுகின்றமை வேடிக்கையாக உள்ளது. பாகிஸ்தானுக்குள் ஊடுருவி ஒஸாமா பின்லேடனை அமெரிக்கா கொலை செய்தது சரி என்றால் பயங்கரவாதிகளான புலிகளையும் இலங்கை ஒழித்தது சரியாகும்.

போலிக் காரணங்களைச் சுட்டிக்காட்டி இலங்கையை சிறையிட வரும் அமெரிக்கா தலைமையிலான குழுவிற்கு பதிலடி கொடுக்க இந்த நாட்டு மக்கள் தயாராக வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைகளுக்கு இராணுவத்தையோ அரசாங்கத்தையோ உட்படுத்த இடமளிக்கக்கூடாது எனக் கூறினார். ___

0 comments:

Post a Comment

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons